வணக்கம்,
சமூக மாற்றத்திற்காகவும், மக்கள் முன்னேற்றத்திற்காகவும் தம் இளமையை அர்ப்பணித்து களப்பணியாற்றி, மானுட சமுதாயத்தை நேசிக்கும் தோழமைகளை அங்கீகரிக்கும் விதமாக செஞ்சுடர், கலைச்சுடர், இளஞ்சுடர் ஆகிய விருதுகளை அளிப்பதில் VGLUG அறக்கட்டளை பெருமிதம் கொள்கிறது.

செஞ்சுடர் விருது 2022
உழைக்கும் மக்களின் நலனுக்கான போராட்டங்களில் தன்னுடைய 15 ஆம் வயதில் இணைத்துக்கொண்டு, 25 ஆம் வயதில் தனது கவனத்திற்கு வந்த வன்கொடுமைக்கு உள்ளான பழங்குடி இருளர் குடும்பத்திற்காக நீண்ட நெடிய சட்ட மற்றும்
கள போராட்டத்தை முன்னின்று நடத்தி தனது 39 ஆம் வயதில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி பெற்று தந்து இன்றும் போராட்ட களத்தில் நிற்கும் தன்னலமற்ற பொதுவுடைமை தோழர். கோவிந்தன் அவர்களுக்கு VGLUG அறக்கட்டளையின் செஞ்சுடர் விருது அளிப்பதில் பெருமிதம் கொள்கிறது.

கலைச்சுடர் விருது 2022
உழைக்கும் மக்கள் வாழ்நிலையை பிரதிபலிக்கின்ற, பெண்களை ஆபாசமாக சித்தரிக்காத, குழந்தைகள் கொண்டாடக்கூடிய கதைகளை காட்சி மொழியான சினிமாவின் வழியே வெகுமக்களிடம் கொண்டுசேர்க்க தலைநகர் சென்னையிலிருந்து ஒரு தசாப்த காலம் தாண்டி தனது வீரியமிக்க செயல்பாடுகளால் மாற்று சினிமாவை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி வரும் மற்றும் பெரும் இளைஞர் பட்டாளத்தை அந்த திசையின் வழியே பயணிக்க களமாடி கொண்டிருக்கும் திரு. மோ. அருண் அவர்களுக்கு VGLUG அறக்கட்டளை கலைச்சுடர் விருது அளிப்பதில் பெருமிதம் கொள்கிறது.

இளஞ்சுடர் விருது 2022
பேருந்து தடமறியாத நகரத்தின் எந்தவித நிழலும் அண்டாத தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்களில் ஒன்றான வேங்குர் கிராமத்திலிருந்து கல்வி என்னும் ஒற்றை சுடரை ஏந்தி தன் பயணத்தில் எதிர்ப்பட்ட அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மென்பொருள் நிபுணராக பணியாற்றிக் கொண்டிருக்கும் முதல் தலைமுறை பட்டதாரி செல்வி. வே. கௌசல்யா அவர்களுக்கு VGLUG அறக்கட்டளை இளஞ்சுடர் விருது அளிப்பதில் பெருமிதம் கொள்கிறது.
1 thought on “VGLUG அறக்கட்டளை சுடர் விருதுகள் 2022”