
தமிழ்நாட்டின் விழுப்புரத்தில் கடந்த 10 வருடங்களாக FOSS சார்ந்த தொழில்நுட்பத்தை வெகுஜன மக்களுக்கு கொண்டு செல்லும் அமைப்பான நம் VGLUG அமைப்பும், உலகின் சிறந்த தகவல் கலைக்களஞ்சியமுமான விக்கிபீடியா (Wikipedia) அமைப்பும் இணைந்து நமது மல்லாட்டை தேசமான விழுப்புரத்தில் விக்கிமீடியா ஹேக்கத்தான் 2022- ஐ வெற்றிகரமாக மே 21 மற்றும் 22 தேதிகளில் நடத்தினோம்.
உலகில் மொத்தம் 8 அமைப்புகள் தேர்வான நிலையில், இந்தியாவில் 2 அமைப்புகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டன. ஒன்று இந்தியாவில் ஐடி துறையில் முன்னிலை வகிக்கும் ஹைதராபாத்திலும், மற்றொன்று தமிழகத்தில் கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக விளங்கும் விழுப்புரத்திலும் நடைபெற்றது.

பெருநகரை நோக்கியே வளர்ச்சிகளும், வாய்ப்புகளும் அமைந்த வண்ணம் உள்ள தற்போதைய சூழலிலும் இவ்வாறான உலகளாவிய நிகழ்வு நம் விழுப்புரத்தில் நடைபெறுவது என்பது சாதாரண விஷயமல்ல. இதற்காக தமது கூட்டு உழைப்பை தொடர்ந்து அளித்துவரும் VGLUG அமைப்பை சார்ந்த அனைத்து தன்னார்வலர்களுக்கும், பங்களிப்பாளர்களுக்கும் முதலில் நன்றி!
நிகழ்வின் ஏற்பாடு
விழுப்புரத்தில் நடைபெற்ற இந்த விக்கிமீடியா ஹேக்கத்தான் 2022 நிகழ்வுக்கான போஸ்டர்களை சமூக வலைத்தளங்களிலும், மின்னஞ்சல் மூலமாகவும் வெளியிட்டு அது குறித்த பிரச்சாரத்தை தொடங்கினோம்.

விக்கிமீடியா சார்ந்த பங்களிப்பை மற்றும் கருவிகளை மேலும் விரிவுப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் விக்கிமீடியா அமைப்பு ஹேக்கத்தான் நிகழ்வை நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு விழுப்புரத்தில் நடைபெற்ற ஹேக்கத்தான் நிகழ்விற்கு சுமார் 70-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 25 பேரை தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக ஹேக்கத்தான் நடைபெறுமிடம், நாள், தேதி மற்றும் நேரம் போன்ற தகவல்களை அதில் தெரிவித்தோம்.




இதற்கிடையில், ஹேக்கத்தான் நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. நிகழ்வு இடத்திற்கான ஏற்பாடு, உணவு, தங்குமிடம், பங்குபெறுவோருக்கு தரக்கூடிய வெல்கம் கிட் போன்ற எல்லாவற்றையும் ஏற்பாடு செய்திருந்தோம்.
VGLUG அமைப்பினரால் உருவாக்க திட்டமிடப்பட்ட கருவிகள்
விக்கிமீடியாவில் உலக அளவில் பலர் பங்களித்து வந்தாலும், பல நேரங்களில் சிறந்த மென்பொருள் கருவிகள் இல்லாததால் விக்கிமீடியா பங்களிப்பாளர்களுக்கு அதிக நேர விரயம் ஏற்படுகிறது. எனவே இதை நம்மால் இயன்றவரை விரைவுப்படுத்த நாம் இந்த ஹேக்கத்தானில் சில மென்பொருள் கருவிகளை உருவாக்கினோம். அவை பின்வருமாறு:
Spot Wiki Edit – எளிமையான முறையிலும், விரைவாகவும், இருந்த இடத்தில் இருந்தே விக்கிபீடியா பக்கத்தை எடிட் செய்வதற்கு இந்த கருவி உதவுகிறது. விக்கிமீடியாவில் உள்ள சிறு சிறு பிழைகளை திருத்தம் செய்ய இது பெரிதும் உதவும். இதற்கான பயர்பாக்ஸ் பிளக்-இன் உருவாக்கப்பட்டு வருகிறது.
Quick Wiktionary- பலவித வார்த்தைகளுக்கான அர்த்தங்களை எளிமையான முறையில் அறிந்துகொள்ள Wiktionary பயன்படுகிறது. நமது Quick Wiktionary கருவியானது, எந்த ஒரு வலைத்தளத்தில் இருக்கும் வார்த்தைக்கான விளக்கத்தை எளிதில் அறிய அந்த வார்த்தையை டபுள் கிளிக் செய்தால் போதும் . இந்த கருவியானது அனைத்து மொழிகளுக்கும் ஏற்ப மேம்படுத்தப்பட்டு வருகிறது.
Bulk Wiktionary Word Creator- புது புது வார்த்தைகளை அதிக அளவில் Wiktionary’இல் உருவாக்க ஒரு சிறந்த வழியை இந்த கருவி வழங்குகிறது. இதை பயன்படுத்தி ஒரே நேரத்தில் பல வார்த்தைகளுக்கான விக்சனரி பக்கங்களை உருவாக்க முடியும்.
Bulk Wiki Downloader – விக்கிமீடியா காமென்ஸில் குறிப்பிட்ட Category’இல் உள்ள பல கோப்புகளை ஒரே நேரத்தில் எளிய முறையில் பதிவிறக்க இந்த கருவி பயன்படுகிறது. மேலும், இந்த கருவிக்கான வெப் அப்ளிக்கேஷன் உருவாக்கப்பட்டு வருகிறது.
மேற்குறிப்பிட்ட கருவிகளை தவிர, Spell4Wiki மற்றும் Wikisource ஆகிய செயலிகளுக்கு எந்த மாதிரியான பங்களிப்பு தேவைப்படுகிறது, அதை மேலும் எவ்வாறு மெருகேற்றுவது என்பதை குறித்த கலந்துரையாடலும் நடைபெற்றது.
நாள் 0 – 20/மே/2022
நாள் 1 நிகழ்வுக்கு முன்பாக நாள் 0-க்கான நிகழ்வை தொடங்கினோம். அதன்படி, மே 20 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கே ஹேக்கத்தானில் தேர்வு செய்யப்பட்டோர் அனைவரும் நிகழ்வு இடத்திற்கு வரும்படி கூறி இருந்தோம். அதற்கேற்ப, சரியான நேரத்திற்கு பலர் விக்கிரவாண்டி டோல் கேட்டிற்கு அருகில் உள்ள ஸ்ரீபாலாஜி பவன் ஹாலுக்கு வந்து சேர்ந்தனர். அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் ஃபிரெஷ் அப் ஆகிவிட்டு, பின்பு நிகழ்ச்சி ஹாலில் அனைவரும் கூடினர்.

நாள் 0-க்கான முதல் நிகழ்வாக அனைவரையும் வரவேற்று ஹேக்கத்தான் குறித்த சிறிய விளக்கத்தையும், என்னென்ன செய்ய போகிறோம் என்பதையும் திரு. சதீஷ் குமார் விளக்கினார். பிறகு ஒவ்வொருவராக தங்களை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து கொண்டனர். அடுத்த இரண்டு நாட்களுக்கான தொழில்நுட்ப முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. அடுத்ததாக, உலக புகழ்பெற்ற சார்லி சாப்ளின் எழுதி இயக்கிய ‘Modern Times’ திரைப்படத்தை திரையிட்டோம். விருப்பமுள்ள அனைவரும் இந்த படத்தை ஆர்வமாக பார்த்தனர். படத்திற்கு இடையில் உணவு இடைவேளை எடுத்து கொண்டு, பிறகு மீதமிருந்த படத்தை பார்த்து முடித்து விட்டு, அது குறித்த சிறிய கலந்துரையாடலை தொடங்கினோம்.

ஒவ்வொருவரும் தங்களின் கருத்துக்களை எடுத்து கூறினர். அனைவரும் ஓரிடத்தில் கூடி பேசவும், சிந்திக்கவும் ஏதுவாக அமைந்தது. இப்படியாக நாள் 0 முடிவு பெற்றது.
நாள் 1 – 21/மே/2022

VGLUG – விக்கிமீடியா ஹேக்கத்தான் தொடக்க விழா நிகழ்வாக தமிழ்தாய் வாழ்த்துடன் சிறப்பாக தொடங்கியது.

அதன் பிறகு பேசிய திரு. கார்க்கி அவர்கள் VGLUG அமைப்பு, அதன் செயல்பாடுகள் மற்றும் FOSS சார்ந்த பங்களிப்புகள் குறித்த அறிமுகத்தை பங்களிப்பாளர்களுக்கு தெரிவித்தார்.

விக்கிமீடியா மற்றும் அதன் துணைத் திட்டங்கள் குறித்த விளக்கத்தை திரு. தகவலுழவன் அவர்கள் விளக்கிக் கூறினார். மேலும், ஒவ்வொரு திட்டத்தை குறித்த முக்கியத்துவத்தையும் அவர் விவரித்தார்.

அடுத்ததாக, திரு. மணிமாறன் அவர்கள் விக்கிமீடியா ஹேக்கத்தான் எதற்காக நடக்கிறது, மீடியா விக்கி API என்றால் என்ன, அதன் நோக்கம் போன்றவற்றை விளக்கினார். பிறகு, பங்களிப்பாளர்கள் பைத்தான் மற்றும் ஜவாஸ்கிரிப்ட் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப பல குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அதன் பின், என்னென்ன கருவிகளை என்னென்ன தொழில்நுட்பத்தில் உருவாக்கவும், மேம்படுத்தவும் போகிறோம் என்பதை கூறினார்.




மேற்குறிப்பிட்ட நான்கு கருவிகளில் எந்த குழுவினர் எதில் பங்களிக்க போகிறார்கள் என்று விளக்கினார். இதற்கடுத்து ஹேக்கத்தான் செயல்பாடுகள் தொடங்கியது.

காலை தொடங்கிய ஹேக்கத்தான் நிகழ்வு மாலை வரை சிறப்பாக நடைபெற்றது. எல்லோரும் மிக ஆர்வமாகவும், உற்சாகமாகவும் பங்களித்தனர். மாலை நேரத்திற்கு பின், சிறிய இடைவேளை எடுத்து கொண்டு அனைவரும் மீண்டும் நிகழ்ச்சி ஹாலில் கூடினர். இரவு, ‘மேற்கு தொடர்ச்சி மலை’ திரைப்படம் திரையிடப்பட்டது. இறுதியில் படத்தை குறித்து விவாதித்தோம். உழைக்கும் மக்களை பற்றிய படம் என்பதால், அவரவரின் பார்வையை முன் வைத்து கலந்துரையாடல் செய்தோம். பிறகு, இரவு உணவோடு நாள் 1 முடிவு பெற்றது.
நாள் 2 – 22/மே/2022
இரண்டாம் நாள் நிகழ்வு முதல் நாளை போலவே தொடங்கியது. முதல் நாளில் என்னென்ன செய்தோம் மற்றும் இரண்டாம் நாளில் என்ன செய்ய போகிறோம் என்பதை குறித்து அந்தந்த குழுக்கள் கலந்துரையாடல் செய்தனர். பிறகு, நாள் 2-க்கான ஹேக்கத்தானில் பங்களித்தனர். காலை தொடங்கிய ஹேக்கத்தான் மிக சிறப்பாக நடைபெற்று கொண்டிருந்தது. இதற்கிடையில், மதிய உணவு பரிமாறப்பட்டது. பிறகு மீண்டும் ஹேக்கத்தானிற்கு பங்களிக்க தொடங்கினர். மாலை வரை ஹேக்கத்தான் நிகழ்வு சிறப்பாக நடைபெற்று, அந்தந்த குழுக்கள் தங்களுக்கான டூல்களை அருமையாக வடிவமைத்தனர்.

இதற்கு அடுத்து, திரு. சீனுவாசன் அவர்கள் விக்கிபீடியாவில் அவரது பங்களிப்பையும், தனது அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டு, விக்கிபீடியாவில் உள்ள தொழில்நுட்பங்களை குறித்தும் விளக்கினார்.

விக்கிமீடியாவுக்கான எதிர்கால பங்களிப்புகள்
செல்வி. விஜயலட்சுமி அவர்கள் VGLUG அமைப்பு எதிர்காலத்தில் விக்கிமீடியாவிற்கு எந்தெந்த வகைகளில் பங்களிக்க உள்ளது என்பதை குறித்து பேசினார். ஹேக்கத்தானின் தொடர்ச்சியாக, வரும் நாட்களில் ஒரு குழுவாக செயல்பட்டு இது போன்ற பல கருவிகளை உருவாக்க உள்ளதாகவும், பல புதிய பங்களிப்பாளர்களை விக்கிமீடியா சார்ந்த தொழில்நுட்பங்களுக்கு பங்களிக்க ஊக்குவிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

அடுத்தாக VGLUG அமைப்பின் எதிர்கால திட்டங்கள் குறித்தும், எவ்வாறு செயல்படுகிறது குறித்தும் சதீஷ் குமார் விளக்கினார். அதில், VGLUG அமைப்பு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து செயல்பட போகிற இனிப்பான செய்தியையும், ஸ்டார்ட் அப் போன்ற புதிய பரிமாணத்தில் வேலை செய்ய உள்ளது குறித்தும் தெரிவித்தார். இதன் மூலம் விழுப்புரத்தில் உள்ள பல இளைஞர்கள் பயனடைவார்கள் என்பதையும் எடுத்து கூறினார்.

இறுதியாக கார்க்கி அவர்கள் இந்த விக்கிமீடியா நிகழ்வு நடைபெற முக்கிய பங்கு வகித்த ஒருங்கிணைப்பாளர்ளை அறிமுகம் செய்தார். ஒவ்வொருவரும் இந்த நிகழ்விற்கான முன்னேற்பாடுகளை கடந்த 2 வார காலமாக செய்து வந்தனர் என்பதையும், VGLUG அமைப்பில் அவர்கள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெற்றுள்ளனர் என்பதையும், அவர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பையும் விளக்கினார்.

இதற்கு அடுத்து, ஹேக்கத்தான் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தங்களின் இரண்டு நாள் அனுபவத்தையும், கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியில் எல்லோருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த விக்கிமீடியா ஹேக்கத்தான் நிகழ்வானது குரூப் போட்டோவுடன் மகிழ்ச்சியாக நிறைவடைந்தது.

இரண்டாம் நாள், இரவு 8:30 மணிக்கு மேல் நடைபெற்ற உலகளாவிய விக்கிமீடியா ஹேக்கத்தான் 2022 Showcase நிகழ்வில் VGLUG அமைப்பைச் சார்ந்த பங்களிப்பாளர்கள் இணைய வழியில் இணைந்து தாங்கள் பங்களித்து உருவாக்கிய கருவிகளை மற்ற விக்கிமீடியா குழுக்களுடன் அறிமுகப்படுத்தினர். இது பல பங்களிப்பாளர்களுக்கு நல்ல அனுபவமாகவும், சிறந்த வரவேற்ப்பும் கிடைக்கப் பெற்றது இது மேலும் நம்மை பல கருவிகளை உருவாக்க உந்துசக்தியாக அமைந்தது.

https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase
இந்த விக்கிமீடியா ஹேக்கத்தான் நிகழ்வில் பங்கு கொண்ட, பங்களித்த மற்றும் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் VGLUG சார்பாக மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்!
#PowerToThePeople
Clicks & Glimpses:
https://commons.wikimedia.org/wiki/Category:Wikimedia_Hackathon_2022_-_VGLUG
Media coverage:
