விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு Glug-இல் நவம்பர் 21, 2021 ஞாயிற்றுக் கிழமையில் வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 25 மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் பலர் 4 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள். பானாம்பட்டு Glug தொடங்கிய பிறகு ஒரு சில வாரங்கள் மட்டுமே வகுப்புகளை நடத்த முடிந்தது. கொரோனா 2.0 ஊரடங்கால் அதன் பிறகு வகுப்புகளை நடத்த முடியவில்லை.

தற்போது பானாம்பட்டு Glug-இல் தொடர்ச்சியாக வாராந்திர வகுப்புகளை நடத்த உள்ளோம். அந்த வகையில் இந்த வார ஞாயிற்றுக் கிழமையில் கணினி பற்றிய முக்கிய அறிமுகத்தையும், அது எப்படி வேலை செய்கிறது என்பதை பற்றியும் விக்னேஷ் விளக்கினார். கற்றக்கொள்ள கூடிய மாணவர்கள் பலரும் 15 வயதுக்கு கீழுள்ளவர்கள் என்பதால் சில எளிமையான மென்பொருள் பற்றிய அறிமுகத்தை தந்தோம்.

Tux paint மென்பொருளை திறந்து எப்படி அதை முழுவதுமாக பயன்படுத்துவது என்பதை விளக்கினோம். அடுத்து Text document பற்றி செயல்பாடுகளை மாணவர்களுக்கு எடுத்து கூறினோம். இந்த இரண்டு மென்பொருளை எல்லா மாணவர்களையும் பயன்படுத்தும்படி அங்கேயே நேரலை பயிற்சி தந்தோம்.

அடுத்து லொஜிக்கல் திங்கிங் தொடர்பான ஒரு மென்பொருளை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தோம். GCompris என்கிற இந்த கட்டற்ற மென்பொருளை (Free and Open Source Software) கொண்டு கணிதம் மற்றும் ஆங்கிலம் சார்ந்த அறிவை வளர்த்து கொள்ளலாம். இது உலகளவில் பயன்படுத்தி வரும் குழந்தைகளுக்கான எளிய மென்பொருள். வந்திருந்த எல்லா குழந்தைகளுக்கும் இந்த மென்பொருள் மிகவும் பிடித்திருந்தது. அவர்களே விருப்பமாக கைகளை தூக்கி தனக்கான கணக்கை செய்து முடித்தனர்.
அடுத்ததாக அறிவியல் சார்ந்த சில சுவாரஸ்யமான தகவல்களை ஹரி பிரியா மாணவர்களுக்கு விளக்கினார். இது வினாடி வினாவை போன்று அமைந்தது. அனைவரும் ஆர்வமாக இதில் கலந்து கொண்டனர். இதன் பிறகு குழந்தைகளுக்கான நற்சிந்தனையை அளிக்கும் வகையில் 4 நிமிட அனிமேஷன் குறும்படத்தை ஒளிபரப்பி, அதை பார்க்க வைத்தோம்.

Piper என்கிற இந்த குறும்படத்தில் எப்படி குழந்தைகள் தைரியமான மனநிலையை ஏற்படுத்தி கொள்ள வேண்டும், தோல்வி ஏற்பட்டாலும் விடாமுயற்சியுடன் எப்படி ஒன்றை எதிர்கொள்ள வேண்டும், தனக்கு கிடைத்தை தான் மட்டும் வைத்து கொள்ளலாம் எப்படி பிறருக்கு அதை பகிர்ந்தளிக்க வேண்டும் போன்ற விழுமியங்களை அதன் மூலம் எடுத்து கூறினோம்.
இப்படியாக இந்த வார வகுப்பு முடிவு பெற்றது.